“திருதராஷ்டிரா, இத்தனையும் நான் பேசியதற்குக் காரணம், பாண்டு நந்தனர் யுதிஷ்டிரர் சத்திரிய தர்மத்தின்படி போருக்குத் தயாராகிறார். இதனால் பாதிக்கப்படப்போவது இருவருக்கும் நடுவே இருக்கின்ற நீங்கள் மட்டுமே. உங்கள் உடம்பு இரண்டாக பிரிந்து ஒரு பக்கத்தை ஒரு பக்கம் எதிர்த்தால் உங்கள் நிலை என்ன ஆகும். எந்தப் பக்கம் ஜெயிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்கள். இதை யோசிக்க யோசிக்க நான் அதிர்ந்து போகிறேன். உங்களுக்கு என்ன உசிதம் என்றுத் தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள்.”

“விதுரா, மிகப் பொறுமையாக எனக்கு நல்ல விஷயங்களை கூறினாய். பாண்டவர்களிடம் நான் பிரேமை வைத்திருக்கிறேன் என்றாலும் துரியோதனனை சந்தித்த பிறகு என் அறிவு மாறிவிடுகிறது. இது என் விதி விதுரா. விதியை மாற்றும் வலிவு எவருக்கும் இல்லை. இன்னும் ஏதேனும் எனக்கு சொல்ல வேண்டியிருப்பின் சொல்.”

மன்னா, இந்த விஷயத்தை இரண்டு விதமாக அணுகலாம். மரணம் உண்டு. அது கர்மத்தால் விலகுகிறது என்பது ஒரு கொள்கை. மரணம் என்பதே இல்லை என்பது இரண்டாவது கொள்கை. இவை இரண்டுமே சத்தியங்கள். இன்னும் சூட்சமமாக சொல்கிறேன்.

தவறே மரணம். தவறின்மையே அமிர்தம். தன்னை அறிந்து கொள்ளாததின் விளைவால் ஒரு மனிதன் மரணத்தை கற்பிதம் செய்து கொள்கிறான். தான் யார் என்ற கேள்விக்கு பெயரும், ஊரும், மதமும், ஜாதியும் சொல்கிறான்.மனம் என்பது இலையும், பூவும், கனியும், காயுமா, அதுதான் காணக் கிடைக்கிறது. ஆனால் அதனாலா வாழ்கிறது. வேர் காணக் கிடைப்பதில்லை. வேரின்றி மரம் இல்லவே இல்லை. கனியும் காயும் இலையும் பாழே. மனிதனுடைய ஆத்மாவை தரிசனம் செய்யாது தனக்குத்தானே அடையாளங்கள் ஏற்படுத்திக் கொண்டு நான் இன்ன வம்சம் இன்னாருடைய பிள்ளை என்கிற போது மிகப் பெரிய தவறு நேருகிறது. தவறே மரணம். தவறின்மை அமிர்தம்.

மனிதன் ஆசைவாய்ப்பட்டு மோகாவேசம் கொண்டு தனக்கு எதிர்படுகின்ற விஷயங்களோடு ஐக்கியமாகி தான் அதற்கு நட்போ எதிரியோ பிரிந்துபடுகிறான். உண்மையில் எவனும் எதற்கும் நட்புமில்லை எதிரியுமில்லை. அந்தராத்மாவில் லயிக்க தெரிந்து விட்டால் மனம் காணாமல் போகிறது. மனமற்ற இடத்தில் ஆசை வருவதில்லை. ஆசை இல்லாததால் மோகாவேசம் கொள்வதில்லை. மோகாவேசம் இல்லாததால் ஆத்திரம், ஆசூயை, கோபதாபம், வஞ்சனை, தற்புகழ்ச்சி, கள்ளம், கபடம், கெடுமனம், மித்ர துரோகம் போன்ற கேவலமான எண்ணங்கள் உண்டாவதில்லை. இந்த விஷயங்களில் சிக்கிக் கொண்டவன் புயற் கடலில் துரும்பென அலைகழிக்கப் படுகிறான். தன்னை சரீர சம்பந்தம் உள்ளவனாகவும் நினைத்துக் கொள்கிறான். இது தவறு. இது தவறான கற்பிதம். இதுவே மரணம்.

நீ சரீரமற்றவன் என்பதை உணர்ந்து விட்டால் இந்த உலக விஷயங்களில் எதிலும் எந்த நாட்டமும் இராது. இவைகளில் நீ செய்ததாகவோ செய்யாததாகவோ கருதமாட்டாய். இந்த நடுநிலையில் நல்லதும் கெட்டதும் வெளிவராது. வயலை விட்டு வீட்டிற்கு போவது போலவும், வீட்டை விட்டு வயலுக்கு போவது போலவும் , அரண்மனைக்கு போவது போலவும் ஒருவன் செய்தால் அது மரணமா. அல்லது மாற்றமா. மாற்றத்தை மரணம் என்று கொண்டிருக்கிறோமா. வயலை விட்டு வீட்டிற்கு வந்தவன் துக்கப்டுவதில்லையே. அரண்மனைக்கு வந்தவன் அழுவதில்லையே. ஆன்மாவின் இடம் மாற்றத்தை அறிந்து கொண்டால் மரணம் உண்டோ.

எனவே, மரணம் என்பது கற்பிதம். மனிதன் உருவாக்கிய விஷயம். அதற்குக் காரணம் தன்னை சரீரம் என கொள்ளுதல். சரீரத்தால் கிளர்ந்த ஆசை. அந்த ஆசை கொடுத்த மோகாவேசம். மோகாவேசத்தால் தோன்றிய அற்ப குணங்கள். இவை அனைத்தும் தவறு. இந்த தவறே மரணம். ஆத்மாவில் லயித்திருப்போருக்கு தவறின்மை என்ற அமிர்தம் கிடைக்கிறது.

கோமணத்தோடு வயலிலும், வேட்டியோடு வீட்டிலும், அலங்காரத்தோடு அரண்மனையிலும் இருப்பது போல ஒவ்வொரு லோகத்திலும் ஒரு நியதி உண்டு. எமனுடைய லோகம் பித்ரு லோகம். அங்கே ஆன்மாவிற்கு வேறுவிதமான இருப்பு.

மன்னா, இன்னும் இந்த விஷயத்தை சூட்சமமாக சொல்கிறறேன் கேள். இறந்த பிறகு மனிதனுடைய மனமும் புலன்களும் உயிரோடு உடன் செல்கின்றன. கனவில் நீ உண்ணுவதில்லையா, சுவையான பானம் குடிப்பதில்லையா, ஆனால் அவை அங்கு இல்லை. மனம் அந்த நினைவை சுமந்து செல்கிறது. இந்த நிலைமையே ஒரு லோகத்தில் வாழ்க்கை ஆகிவிடுகிறது. சரீரமாய் இருக்கும் போது உணவிலும், மதுவிலும், பெண் போகத்திலும், செல்வத்திலும், ராஜ்ஜியம் ஆளுவதிலும் ஆவல் கொண்ட மனிதன் நினைவு இறந்த பின்னும் அவனை ஆட்டிப் படைக்கிறது.

சரீரத்தோடு இருக்கும்போது ஆன்ம தரிசனம் பெற்று விட்டால், சரீரம் தாண்டி உள்ளே இருப்பது யார் என்று புரிந்து விட்டால் மரணத்திற்குப் பிறகு மனம் ஆன்மாவை சுற்றி இருக்காது. புலன்கள் உதிர்ந்து விடுகின்றன. புலன்களை வெல்லாத மனம் இறந்த பிறகும் சுக போகத்திற்கு அலைகிறது. புலன்களில் வசப்படுகிறபோது ஆன்மாவை அறிகின்ற ஞான சக்தி அழிந்து விடுகிறது. மரணத்தை வெல்ல விரும்புவன் தன் ஆன்மாவை அறிய வேண்டும். ஆன்மாவை அறிவதற்குண்டான எளிய வழி சரீரம் உள்ளபோதே பரமாத்மாவை சரணடைதல். பரமாத்மா தரிசனம் ஆன்மாவை இனம் காட்டுகிறது.

-தொடரும்