மார்கழி மாதம். பார்த்தசாரதியைப் பார்த்த பிறகு இன்னொரு பெருமாள் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. நான் சைவன். ஸ்மார்த்தன். ஆனாலும் இவர்தான் முதல் தெய்வம், அவர் முக்கிய தெய்வம் என்ற பாகுபாடு இல்லை. ஹரியும் சிவனும் ஒன்று என்கிற அழகிய எண்ணம்தான் பரம்பரை குணமாக இருந்திருக்கிறது. சிவன் என்கிறபோது பணிவும் அன்பும் பெருமாள் என்கிறபோது சினேகமும், காதலும் பெருகித்தான் வருகின்றன.

எங்கேனும் ஒலிநாடாவில் கதை சொல்லியபடி வெளியூர் போகலாம் என்று நண்பர் கிருஷ்ணாவிடம் கேட்டேன். கிருஷ்ணா தினகரனில் உதவி ஆசிரியர். என்னிடம் உதவியாளராக இருந்தவர். நல்ல படிப்பாளி. பல்வேறு கோவில்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தவர். நல்ல கட்டுரைகள் எழுதியவர். உபன்யாசங்கள் பலவற்றை தேடிப் போய் கேட்கிறவர். விஷய ஞானங்களை கிரஹக்கிறவர். தன் குழந்தைகளையும் சனாதன தர்மம் ஒட்டியே வளர்க்கிறவர். தாய் மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மீது மாறா காதல் கொண்டவர். அவர் பழைய சீவரம் அருகே திருமுக்கூடல் என்ற இடத்திற்கு போகலாம். அங்கு ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னார்.

நான் பிற்பகலில் பழைய சீவரம் நோக்கி கிளம்பினேன். இரண்டு மணிக்கு கிளம்பினால் நாலரை மணிக்கு போய்விடலாம் என்பது எண்ணம். ஆனால் தாம்பரம் தாண்டி வருவதற்குள் ட்ராஃபிக் ஜாம். மெல்ல நகர்ந்தது. ஒரு மணி நேரம் தாமதம். ஐந்தரை மணிக்குத்தான் பழைய சீவரம் போக முடிந்தது. திருமுக்கூடலுக்கு கடந்து போய் திரும்ப வந்து வண்டியை வாசலில் நிறுத்தி அரைகுறையாய் திருந்திருந்த கதவைத் தாண்டி உள்ளே போனால் ஆயிரம் வருஷத்து கற்றளி. பெரிய கோவில். இராஜேந்திர சோழனுடைய மகன் வீர இராஜேந்திரன் கல்வெட்டுகள் அங்கிருக்கின்றன. என்னவிதமான மருந்துகள், எதற்கு எப்படி சேமித்து வைக்கப்படவேண்டும் என்ற குறிப்புகள் நிறைந்த ஒரு பெரிய கல்வெட்டு இருக்கிறது. கோவில் முழுவதும் தொல்லியல் பாதுகாப்பில் இருக்கிறது.

கருங்கல் தூணுக்கு நடுவே அரை இருட்டில் நடந்தபோது அர்ச்சகர் சுற்றுப் பிரகாரங்களுக்கு சாதம் பலி போட போயிருப்பதாய் சொல்ல மண்டபத்தில் அமர்ந்து தாயே தந்தையென்றும் தாரமே கிளைமக்களென்றும் என்று பாடி பிறர்க்கே உழைத்து ஏழையானேன் என்று விகித்து அன்றைய நாளில் சொல்ல வேண்டிய போற்றியைச் சொல்லி கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று கேள்வி கேட்டு ஆண்டாளாய் உள்ளே உணர்ந்து தடி ஊன்றி உட்கார்ந்திருக்க, அர்ச்சகர் வந்தார். மெல்ல எழுந்து கருவறைக்குப் போக நெடியோனாய் கருத்த மேனியனாய் கண்கள் மறைக்கும் நாமம் கொண்டவனாய், முகவாயில் வடு உள்ளவனாய், தங்க கவசம் போட்டவனாய், சங்கு சக்ரதாரியாய், அபய அஸ்தனாய், அதில் தாமரைப் பூவும் வைத்துக் கொண்டிருப்பவனாய் பத்தாறு வேட்டியில் மிக அருமையான ஒரு தரிசனம் கிடைத்தது.

எனக்கு திருப்பதி பெருமாளை தரிசிக்க முடியவில்லை. முன்கூட்டியே அனுமதி சீட்டு வாங்கியும் அந்த கூண்டு குழுவில் நடந்து போய் படிகள் ஏறி இறங்கி அந்தக் கூட்டத்தில் மூச்சு முட்ட நடந்து தரிசனம் செய்ய என்னால் முடியாது. என் உடல்நிலை ஒத்துக் கொள்ளாது. ஒரு வி.ஐ.பி போல உள்ளே போக வேண்டுமென்றால் அது ஐனாதிபதியாகத்தான் இருக்க முடியும். எனவே வேங்கடாஜலபதி என்பதை நான் பார்த்தசாரதியின் உருவமாகக் கொண்டு ஏக்கம் வந்தபோதெல்லாம் அந்தப் பக்கம்தான் போயிருக்கிறேன். ஏழுமலையான் தரிசனம் நமக்கு கிட்டாது மகனுக்கு திருமணம் செய்தபோது பார்த்ததுதான் கடைசி என்ற ஏக்கத்தில் இருந்தேன்.

திருமுக்கூடல் பெருமாளை பார்த்த பிறகு அந்த எண்ணம் இங்கிருக்கிறார் இங்கிருக்கிறார் கோவிந்தன். இதோ ஏழுமலையான் என்று உள்ளம் கூவி உடம்பு சிலிர்த்து, “பார்க்க முடியாது என்று நினைத்தேன் தரிசனம் கொடுத்து விட்டாய் உன் அருகே நின்று கை கூப்ப முடியாது என்று நினைத்தேன் தனியனாக எனக்கு காட்சி கொடுக்கிறாய்”. ஏகாந்த சேவை. கோவிலில் யாருமேயில்லை. நான் என் மனைவி, உதவியாளர் பாக்கியலகூஷ்மி மூவரும்தான் இருக்கிறோம்.

உடம்பு சிலிர்த்தது. முதுகு அதிர்ந்தது. நெஞ்சு விம்மியது. கன்னங்களில் அழுத்தம் ஏற்பட்டது. பற்கள் கிட்டித்தன. கண்கள் சொறுகின. எனக்கு யாரோ என்னை தழுவிக் கொள்வது போல் தெரிந்தது. இறுக அணைத்தது போல் மூச்சு திணறிற்று. தலையை கோதுவது போல் தெரிந்தது. கன்னமும், காதும் வருடும்படியாகத் தெரிந்தது. முதுகை பலமான கைகள் தட்டிக் கொடுத்தன. என் தோளை யாரோ அழுந்த பிடித்திருந்தார்கள். நான் தடுமாறினேன். கோவிந்தா கோவிந்தா என்று கத்தினேன். எனக்கு தரிசனம் தருகிறாயா. என்னைப் பார்க்கிறாயா. என்னைத் தொடுகிறாயா. எனக்கு என்ன இந்த அவஸ்தை எது என்று அலறினேன். அழுதேன். அங்கு கிடைக்காத ஒரு தரிசனத்தை இங்கு தருகிறாயா. எனக்கு இல்லையே என்று நினைத்தேனே இருக்கிறது என்று சொல்கிறாயா என்று குமுறலோடு அழுதேன். மனைவியும், உதவியாளரும் பிடித்துக் கொண்டார்கள்.

மெல்ல சுயநினைவுக்கு வர, கவிழ்த்து வைத்த ஒரு டேக்ஸாவில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தினார்கள். அந்த டேக்ஸா இல்லாது போனால் நான் தரையில் விழுந்திருப்பேன். தரையில் விழுந்தால் மூன்று பேர் சேர்ந்துதான் என்னை தூக்கி நிறுத்த முடியும். இந்த பெண்மணிகளால் முடியாது. நல்லவேளை எனக்கு உட்கார ஒரு டேக்ஸா கிடைத்தது. மனம் அமைதியாயிற்று. மூச்சு சீராயிற்று. கண்கள் பழைய நிலைக்கு வந்தன. உடம்பு ஒருநிலைப்பட்டது. கேவல் குறைந்தது. நான் மறுபடியும் ஆரத்தி காட்டச் சொல்ல வணங்கினேன். ஒருமுழம் பூக்கூட வாங்கி வரவில்லை. ஏதோ ஒரு கதை சொல்வதில் இருந்துவிட்டேன். இங்கு கிடைக்கும் என்று நம்பிக்கையில் வந்து விட்டேன். இந்த சிறு ஊரில் அப்படி ஒரு கடை இருப்பதாகவே தெரியவில்லை. தினந்தோறும் உனக்கு துளசியால் பூஜை செய்கிறேன். ஆனால் இங்கே ஒரு சிறிய துளசி தளம் கூட உனக்கு சமர்ப்பிக்கவில்லை. தினந்தோறும் என் வீட்டில் பேரிட்சம் பழமும், திராட்சை பழமும் நைவேத்யம் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை இரண்டு மூன்று நைவேத்யங்கள் தருகிறார்கள். ஆனால் இங்கே உலர் திராட்சை கூட தரவில்லை. என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய், மறுபடியும் வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தியிருக்கிறாய் அல்லவா, மாலைகளோடும், பழங்களோடும் உன்னை தரிசிக்க வரவேண்டும் என்று சொல்கிறாயல்லவா. பத்தாறு வேட்டி கொண்டு வா என்று கேட்கிறாய் அல்லவா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். மனம் குளிர அப்பன் வெங்கடேச பெருமாளை தரிசித்தேன். உற்சவர் ஸ்ரீனிவாசனை வணங்கினேன். கல்வெட்டுகளை தடவி கொடுத்து விட்டு சற்று தொலைவு நடந்து காரில் ஏறி பழைய சீவரத்திலுள்ள நரசிம்மரை தரிசிக்கப் போனேன்.

அந்தக் கோவிலுக்கு கார் போகும். ஆனால் அது எனக்குத் தெரியாமல் போய்விட்டது. ஒரு இருபத்தியாறு படிகள் இருக்கும். கொஞ்சம் நெட்டுக் குத்தாகத்தான் இருந்தது. நரசிம்மரை பார்க்க வேண்டும் என்ற வெறி. கார் போகும் பாதை இருக்கிறது என்று தெரியாத புத்தி. இருபத்தியாறு படிகளும் யோகி ராம்சுரத்குமார் பெயரைச் சொல்லி ஏறினேன். இடுப்பு வலித்தது. கால்கள் நடுங்கின. உடன் பாக்கியலகூஷ்மி கை பிடித்து வர, என்னுடைய கார் டிரைவர் சபேஷ் பின்னிருந்து மெல்லத் தள்ள படியேறி வந்து ஆசுவாசப்படுத்தி உள்ளே போய் லகூஷ்மி மடியில் இறுத்திய நரசிம்மரை தரிசனம் செய்தேன். அந்தக் கோவில் வாசலில் ஜாதிப்பூ இருந்தது. கனகாம்பரமும் இருந்தது. ஜாதிப்பூவும் , கனகாம்பரமும் நிறைய வாங்கிக் கொண்டோம். இருந்தது மொத்தமும் எடுத்துக் கொண்டோம். அதை நரசிம்மருக்கு மாலையாகச் சாற்றிய போது மனம் நிறைந்தது. அங்கே தரிசனத்திற்கு உட்கார எனக்கு ஸ்டூல் போடப்பட்டது. உட்கார்ந்த வண்ணம் தரிசனம். தீர்த்தம் சடாரி என்று ஏற்றுக் கொண்டு காரில் ஏறி மலைப்பாதை வழியே இறங்கினோம். மூன்று மணி நேர பயணத்தில் வீடு வந்து சேர்ந்தோம்.

உள்ளே எங்கோ பெரிய தீர்த்த யாத்திரை போனதாக ஒரு நிறைவு ஏற்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு நல்லது என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. ஒரு செய்தி இருக்கிறது என்றுத் தோன்றியது.

உங்களில் எவருக்கேனும் ஆர்வம் இருப்பின் திருப்பதி தரிசனம் வேண்டும் என்ற எண்ணம் இருப்பின் பழைய சீவரம் அருகே இருக்கின்ற திருமுக்கூடல் கோவிலுக்குப் போங்கள். திருப்பதி நெடியோனை அங்கு தரிசிக்கலாம்.

செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் ஒரு பத்து கிலோ மீட்டர் தொலைவில் பழைய சீவரம் இருக்கிறது. போய் பாருங்கள். அப்பன் வெங்கடேசனோடு பேசிவிட்டு வாருங்கள். உங்களுக்கும் ஏதோ ஒரு விஷயம் புரியும்.