வெவ்வேறு காட்டிலிருந்தும் வேடர் குழுக்கள் அவன் சுகக் குறைவு  கேட்டு பார்க்க வந்தார்கள். விஷயம் என்ன, எப்படி நடந்தது என்று விசாரித்தார்கள்.

அவன் விவரித்தான்.

அவன் சொன்ன கதை கேட்டு ஆஹூ ஆஹூ என்று கோபக் கூச்சல் எழுப்பினார்கள். ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டார்கள். சிலர் கன்னத்தில் கை வைத்துக் கண்ணீர் விட்டார்கள். கடவுளே இது நியாயமா என்று வானம் பார்த்துக் கேட்டார்கள். அவன் விழித்தான்.

இதில் என்ன அநீதி? குருவை மனதுள் நினைத்து வித்தை கற்றுக் கொண்டான். அவர் அருளால் அஸ்திரங்கள் அவனுக்கு கை வந்தன. வில் வித்தை பூரணமாயிற்று. அவருக்கு தட்சிணை கொடுப்பது அநீதியா, காரணமின்றியா அவர் கட்டை விரல் கேட்பார். படிப்பும், ஞானமும் உள்ளவர்கள் தவறு செய்வார்களா, எழுத்தறிவில்லாத வேடர் கூட்டம் ஏன் கோபமாய் கூவுகிறது.

பாவி பாவி ஏன்டா கட்டை விரல் கொடுத்தாய். துர்புத்தியுள்ள அந்தணன் சூழ்ச்சி ஏன் தெரியாமல் போயிற்று உனக்கு. உன்னால் இந்த வேடர் குலமே முன்னுக்கு வந்திருக்குமே. கரடி, புலிகளைப் போல் காட்டில் திரியும் இந்த அவல வாழ்க்கைக்கு விடிவு வந்திருக்குமே, உனக்கு அரசாளும் தகுதியும், நம் குலத்திற்கு நல்ல சோறும், படிப்பும், சுகபோகமும் வந்திருக்குமே. ஏன்டா கட்டை விரல் கொடுத்தாய். ஏன் மறுக்கவில்லை. ? ஆஹூ ஆஹூ என்று இரைந்தார்கள்.

கூட்டத்தில் முது கிழவன் எழுந்தான்.

“எங்கள் குலக்கொழுந்தை , எங்களிடையே தோன்றிய ஒரே சுடரை, அவன் ஆன்ம பலத்தை எப்படி தட்சணை என்கிற சூழ்ச்சியால் அறுத்து அணைத்தாயோ அதே போல உன் மரணமும் சூழ்ச்சியால் நிகழட்டும். எங்கள் ரத்தம் பாசத்தால் துடிப்பது போல, அடே, அந்தணனே, தெய்வம் என்று ஒன்று இருப்பின் உன் ரத்தமும் பிள்ளைப் பாசத்தால் துடிக்கட்டும். உன் பிள்ளைப் பாசமே உனக்கு எமனாகட்டும். துரோணா, இது நடக்கும்.”

வேடர் கூட்டம் ஆம் ஆம் என்று கூச்சலிட்டது. மேலே மேகங்கள் இடி முழக்கின. அவர்கள் சாபம் சரி என்று பதில் சொல்லின. அது நிகழும் என்று ஆமோதித்தன.

உண்மையான நெஞ்சு வேதனை , சத்தியவாக்கு உள்ளவன் சாபம் என்றேனும் ஒரு நாள் பலிக்கும். நல்லவரின்  மனத்தவிப்புக்கு காலம் பதில் சொல்லும்.

 

-தொடரும்