கேள்வி: உங்கள் குரு யோகி ராம்சுரத்குமாரை பெரிய உருவச் சிலையாக வடித்து உங்கள் வீட்டை கோவிலாக மாற்றிவிட்டீர்களே?

என் குரு எனக்குள் உருவமாகவும் இருக்கிறார். அருவமாகவும் இருக்கிறார். உருவ வழிபாடு என்பது மிகச் சிறந்த விஷயம். கடவுளை அறிவதற்கு துணையாக வருகின்ற ஒரு செயல். உங்கள் பெயரைக் கூப்பிட்டால் கண்மூடி இருக்கின்ற உங்களுக்குள் உங்கள் முகம் ஞாபகம் வரும் எனில் உங்களால் உருவமற்றதை வழிபட முடியாது. உங்கள் உருவம் உங்களுக்கு இல்லாது போகின்ற ஒரு
உயர்ந்த நிலையில்தான் அருவ வழிபாடு சாத்தியம். அதனால்தான் உருவம் என்ற குணங்கள் இல்லாது அருவம் என்ற திகைப்பும் இல்லாது உருவ அருவ வழிபாடாக சிவலிங்கத்தை சனாதன தர்மம் உருவாக்கியிருக்கிறது. அது ஒரு வழி. எங்கும் நிறைந்த ஈசன் இங்கு இந்த வடிவிலே இருக்கிறார். இந்த வடிவு ஈசன் வடிவு அல்ல. எல்லா வடிவும் ஈசன் என்ற மிகப் பெரிய இடத்திற்கு அது அழைத்துப்
போகிறது. ஆனால் உருவ வழிபாடு என்பது வாழ்ந்த ஒருவரின் ஞாபகமாக அவர் கல்யாண குணங்களை மறுபடியும் நினைத்துப் பார்க்கும் விதமான ஒரு வடிவத்தை கொடுக்க முயல்கிறது. அந்த வடிவத்தை வைத்துக் கொண்டு அந்த வடிவத்திற்கு பின்னால் இருக்கின்ற அவருடைய தன்மைகளை, உயர்ந்த வாழ்க்கையை, சொன்ன தத்துவங்களை நாம் நினைவு கூற வாசலாக அமைகிறது.

உருவ வழிபாடு ஒரு யுத்தி. அருவ வழிபாடு ஒரு சாதனை. எல்லோராலும் சாதனை செய்ய இயலாது. கடவுளுக்கு உருவமில்லை, ஏன் குணமேயில்லை என்றும் சனாதன தர்மம் சொல்கிறது. ஆனால் மனிதர்கள் வாழும் வாழ்க்கைக்கு துணையாக நல்ல விதிமுறைகளும், ஒழுக்கக் கோட்பாடுகளும், அமைதியும், கருணையும், இன்சொல்லும் நடந்து காட்டுதலும் முக்கியமாகின்றன. இவை
கொண்டு எவர் உயரிய முறையில் வாழ்கிறாரோ அவரை கடவுள் என்று அழைக்கிறார்கள். அதனால் கடவுள் என்பது குணங்கள்தான். ஆனால் குணத்திற்கு அப்பாலும் உள்ளது கடவுள் என்பதை குணங்களைப் பற்றி நன்கு புரிந்தவர் உணர்ந்து கொள்வார். ஆனால் எந்த நல்ல வழியையும் சொதப்பி சீரழிக்க மனிதர்களால் முடியும். இன்னைக்கு ஸ்வாமி நேரா வந்து உப்புமா பண்ணி போடேண்டி அப்படின்னார். அதான் உப்புமா பண்ணிண்டு இருக்கேன் என்று பேசுபவர்களும், கனவுல கடவுள் வந்து வேலால நாக்குல எழுதினார். அதான் பாட்டு எழுத ஆரம்பிச்சுட்டேன். வேலையை விட்டுட்டேன் என்று சொல்பவர்களும் உண்டு.

எது மன ஆரோக்கியத்திற்காக செய்கின்ற வழியோ அதுவே மனப்பிழற்சியாகவும் மாறி விடுவது உண்டு. இது தனிமனிதர்களுடைய வலிவையும், திறனையும் பொறுத்து இருக்கிறது.

யோகி ராம்சுரத்குமார் என்கிறத் திருவண்ணாமலை மகானை நான் அண்மையில் உட்கார்ந்து ஸ்பரிசித்து பேசி, சிரித்து குதூகலித்து ஒரளவு உணர்ந்திருக்கிறேன். உணர வைக்கப்பட்டிருக்கிறேன். தன்னுடைய உயர் வலிவின் ஒரு பகுதியை அவர் காட்டினார். அதை தாங்க அவரே உதவி செய்தார். இந்த விஷயங்களை மறுபடி மறுபடி ஞாபகப்படுத்த இந்த உருவம் எனக்கு உதவி செய்கிறது. இந்த
அறுபத்தெட்டு கிலோ எடையுள்ள வெண்கலச் சிலையை திரு.பாண்டியன் என்கிற ருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஒரு நண்பர் கொண்டு வந்து கொடுத்தார்.குரு தானாக வந்து என் வீட்டில் நடுநாயகமாக அமர்ந்து கொண்டார்.

கேள்வி: பூஜை புனஸ்காரங்கள் மிக விமரிசையாக நடைபெறுமா?

மாதாந்திரமாக மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் கூடுவது வழக்கம். ஒரு ஐம்பது குடும்பத்தினர் தங்கள் மனைவி குழந்தைகளோடு வந்திருந்து அவர் பெயர் சொல்லி பாட்டு பாடி பகல் உணவை பிரசாதமான ஏற்றுப் போவார்கள்.

நான் பாடல்கள் எழுதி பழக்கப்பட்டவன் அல்ல. அதில் பெரும் விருப்பம் காட்டியவனும் அல்ல. ஆனால் என்னைப் பற்றி பாடல்கள் எழுது என்று என்னை அவர் கட்டளையிட்டிருக்கிறார். அவர் சொன்னதால் பாடல்கள் என்னிடமிருந்து வந்தன. என்னுடைய திறனையும் மிஞ்சி சரியான வார்த்தைகளாக அவை
அமைந்து விட்டன. அது அவருடைய ஆசிர்வாதம். அறுபது, எழுபது பேர் அமர்ந்து அந்தப் பாடல்களை கவனமுடன் பாடுகிறபோதும், இராம நாமம் சொல்கிற போதும் ஒரு நிம்மதி பரவுகிறது. இந்த வீட்டினுடைய உயிர்சக்தி அதிகமாகிறது. இது என்ன வீடா, கோவிலா என்று வந்தவர்கள் கேட்கிறார்கள். கண்மூடி அமர முயற்சிக்கிறார்கள்.

பதுமையின் உருவமும், பாட்டும், நாம ஜபமும் ஒரு ஆரம்பம்தான். இன்னும் தொலைதூரம் போக வேண்டும். இந்த ஆரம்பமே கூட இல்லாது வாழ்க ஒழிக என்று மனிதர்கள் இருப்பதை பார்க்கும் பொழுதுதான் வியப்பாக இருக்கிறது. மனதை தியானத்தில் ஈடுபடுத்துகின்ற அரிச்சுவடி பக்தி. பக்தியினுடைய ஒரு வெளிப்பாடு நாம ஜபம். நாம ஜபம் செய்யச் செய்ய வீண் பேச்சுகள் குறையும்.
தொடர்புகள் அறுந்து மனம் உள்ளுக்குள் தங்கி நிற்கும். அப்பொழுது ஏற்படுகின்ற மாற்றம் எழுத்தில் வராது. அந்த மாற்றம் உங்களை கை பிடித்து வெகு உயரத்திற்கு கொண்டு போய்விடும். நீங்கள் செய்ய வேண்டியது என்பது அப்பொழுது ஒன்றும் இராது.