நேற்றைய உடையார் கேள்வி-பதிலின் தொடர்ச்சி

கேள்வி: என்ன வியக்க வைக்கும் விசயங்கள்?

பெரிய கோவில் என்கிற பிரகதீஸ்வரர் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கிருந்து கல் வந்தது என்பதை உங்களால் யூகிக்கவே முடியாது. தெற்குப் பக்கம் நார்த்தாமலை என்கிற புதுக்கோட்டைக்கு அருகே இருக்கின்ற ஒரு மலைப்பகுதியிலிருந்து. மலைகூட அல்ல, பல பாறை அடுக்குகள் இருக்கின்ற இடம். அங்கிருந்து பல துளைகள் போட்டு பெரிது பெரிதாய் பாறையை வெட்டி எடுத்து அதை பல்சக்கர பெரு வண்டிகளில் ஏற்றி ஆறு மாடுகள் இழுக்க, இரண்டு யானைகள் தள்ள மிக அற்புதமான முறையில் தஞ்சைக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். வழியிலே மேடு இல்லை. பள்ளம் இல்லை. ஆறு இல்லை. மிகச் சரியான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

உச்சகட்டமான, ஒரு நூல் இழை பிசகாத கல் தச்சு வேலை. உலோகச் சிற்ப வேலை. இரும்பை ஆயுதம் செய்ய உருக்குகின்ற வித்தைகள், ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாப்பாடு, அவர்களுக்கு தங்கும் இடங்கள், வைத்திய உதவி என்று பலதும் செய்யப்பட்டிருக்கிறது. எல்லா கிராமங்களிலிருந்தும் உணவு தானியங்களும், காய்கறிகளும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அதற்குண்டான பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. துணி உற்பத்தி உச்சியில் இருந்திருக்கிறது. எண்ணைய் வித்துக்கள் விளைந்து எண்ணையாக்கி பலகாரங்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

தீடீரென்று தமிழர்கள் விஸ்வரூபம் எடுத்தது போல இவர்கள் காலத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். ஆனால் இராஜராஜர் காலத்திலும், இராஜேந்திரர் காலத்திலும் மிகச் சிறந்த கலை இலக்கிய படைப்பு வெளிவரவில்லை. அது ஏன் என்று புரியவில்லை. ஒருவேளை போர் என்பதில் ஈடுபட்டிருப்பதால் புலவர்களை பராமரிக்காமல் போயிருக்கலாம். ஆனால் அடுத்து மூன்று நான்காவது தலைமுறைகளில் மிகச் சிறந்த கவிஞர்கள் தோன்றி உன்னதமான இலக்கியங்களை எழுதியிருக்கிறார்கள். இராமாயணம் எழுதிய கம்பரும், பெரியபுராணமும் தோன்றியது சோழர்கள் காலத்தில்தான். அதற்குண்டான் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது இராஜராஜனும், இராஜேந்திரனும் தான்.

கேள்வி: என்னவிதமான முயற்சிகளில் இந்த நாவல் உருவாகியது?

ஊர் சுற்றி பார்ப்பது தான் முதல் முயற்சி. ஆரம்ப நாட்களில் மாலனுடைய ஸ்கூட்டர் தான் எனக்கு வாகனம். பிற்பாடு அதற்குண்டான ஏற்பாடுகளை நான் செய்து கொண்டேன். காரில் போவதைவிட தஞ்சையிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் போவது மிகத் தெளிவாக இருந்தது. வழித்தடம் காட்டும் வரைபடம், சோழர்களைப் பற்றிய புத்தகங்கள், கோவில்கள் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை பையில் எடுத்துக் கொண்டு தனியே ஒரு ஸ்கூட்டரில் பல்வேறு பக்கம் நான் பயணப்பட்டேன். அந்த காலத்திலேயே ஒரு நாளைக்கு ஸ்கூட்டருக்கு நூறு ரூபாய் வாடகை கொடுத்தேன். பெட்ரோல் போட்டுக் கொண்டேன். கிடைத்த இடங்களில் சாப்பிட்டேன். வேறு எவரையும் பின்னால் ஏற்றிக் கொள்ளவில்லை. ஏற்றிக் கொண்டால் என் மனம் போல நான் பேசிக் கொண்டு போகமுடியாது. அல்லது இந்த நடிகரைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்கிற மொக்கை கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்படியாக இருக்கும். முற்றிலும் சோழ தேசத்து படைத் தளபதிகளில் ஒருவனாகவே நான் ஸ்கூட்டரில் பயணப்பட்டேன்.

அது மிக அற்புதமான நாட்கள். அந்த நேரம் நான் எழுதியதெல்லாம் சமூக நாவல்கள். இந்த நாவலுக்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தேனே தவிர இதைப் பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. எல்லாம் மனதிற்குள் கெட்டியாய் பூட்டப் பட்டு இருந்தன.

கேள்வி: எழுதிவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்ததா?

எழுதாது போய்விடுவோமோ என்ற பயமும் இருந்தது. நிறைய சிகரெட் குடிப்பதால் உண்டான இருமலும், புகைச்சலும், உடல் சோர்வும், நரம்பு தளர்ச்சியும் சில சமயம் அதிகமாகி படுக்கையில் சாய்த்து விடும் போது அடடே, அதை எழுதாது போகிறோமே என்று பயந்தேன். ஒரு வாரப்பத்திரிகை இதைப் போட முன்வந்தது. ஆனால் நூறு அத்தியாயங்கள் தான் இடம் கொடுத்தது. அதுவே மிக அதிகம். பிறகு அதை நிறுத்திவிட்டு ஒட்டுமொத்தமாக எழுதி பல்சுவை நாவல் என்கிற ஒரு தனி புத்தகத்தில் உடையாரை தொடர்ந்து எழுதினேன். நல்ல இடைவெளியோடு எழுதினேன். யாருக்கும் பதில் சொல்ல வேண்டியிராத அந்த புத்தக வடிவம் உடையாரை சிறப்பாக எழுத எனக்கு பேருதவி செய்தது.

கேள்வி: சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி இப்போது முகநூலில் பலபேர் எழுதுகிறார்களே, இது பற்றி உங்கள் கருத்து என்ன?

-பதில் நாளை