உலகத்தின் எல்லா பக்கத்திலும் எல்லா உயிரினங்களுக்கும் உண்டான ஒரே பிரச்சனை மரணம். மரணம் ஒரு பயம் கொடுக்கும் பிரச்சனை என்றால் அதற்கு அந்த பிரச்சனைக்கு வாசல் நோய். அந்த வாசலை எவர் தொடுகிறாரோ அவர் மரணம் பற்றித்தான் உடனடியாக யோசிக்கிறார்.

இந்த தும்மல் இறப்பை கொண்டு வந்து கொடுத்துவிடுமா? இந்த தலைவலி என்னை எழவொட்டாது சாகடித்து விடுமா? இந்த வயிற்றுவலி என்னை மரணத்துக்குள்ளே தள்ளிவிடுமா? என்ற கலவரம்தான் நோய். மனிதருடைய உடனடியான நடவடிக்கை ஒரு மருத்துவரின் அருகே போய் அவரை நம்பி நிற்பதாக முடியும். “ஜலதோஷம்தானே நான் சரி பண்ணிடறேன். அதற்கு இந்த மாத்திரை இருக்கு. வயிற்றுப் போக்கு இப்படி ஒரு மருந்து இருக்கு” என்று பல்வேறு விதமான வைத்தியர்களும் பல்வேறு விதமான மருந்துகளைச் சொல்வார்கள். வயிற்றுப் போக்கு நின்று விட்டால் மருத்துவர் தெய்வமாகி விடுவார்.வயிற்றுப்போக்கு நிற்கவில்லையென்றால், தலைவலி தீரவில்லையென்றால், ஜலதோஷம் தொடர்ந்தது என்றால் அப்போது அந்த வைத்தியருடைய நிலைமை வெகுவாக கீழ் இறங்கி, என்ன செய்தால் இந்த தலைவலியும், இந்த வயிற்றுப்போக்கும், இந்த ஜலதோஷமும் தீரும் என்ற அவஸ்தை வந்துவிடுகிறது.

இதைவிட தங்களுடைய குரு என்பவரிடம் போய் தாங்கள் பட்ட இந்த அவஸ்தையைச் சொல்லி, தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைச் சொல்லி, அவைகள் வெற்றி பெறாததைச் சொல்லி என்ன செய்வது என்று கேட்க, அந்த குரு முதுகு தடவலிலோ, அல்லது மூச்சுப்பயிற்சியிலேயோ அல்லது வேறு ஏதேனும் பொருள்கள் உண்ண கொடுப்பதிலேயோ அல்லது ஒரு சிட்டிகை திருநீறு எடுத்து அழுத்தி இட்டு தலையில் ஊதி அனுப்பவிலேயோ, அல்லது மெல்லிய பிரம்பால் இரண்டு முறை அடித்து துரத்துவதிலேயோ அந்த நோயை குணப்படுத்தி விடுவார். அது குணமாகிவிடும். அப்படி குணமான பிறகு அந்த குருவிற்கு மிகப் பெரிய மரியாதை கிடைக்கும். இதை ஒரு குரு எப்படிச் செய்கிறார் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். எனக்கு இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.

என் மனைவி கமலா வழக்கமாக எங்களோடு குருவை பார்க்க வருவார். நாங்களெல்லாம் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர் மௌனமாக குருவை பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால் நன்றாக பாட்டுப் பாடுவார். அந்த முறை குரு அவரை கவனித்துக் கொண்டு, உனக்கு அலுவலகத்தில் என்ன தொந்தரவு என்றுக் கேட்க, எதுவுமில்லை என்றார். அவர் அலுவலகத்தில் தொந்தரவு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். உண்மையைச் சொல் என்று நான் சொல்ல, குரு என்னை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அவர் பேசத் துவங்கினார். ஆனால் தான் சரியாக இருப்பதாகவே கமலா சொன்னார். என்றும் இல்லாமல் அன்று கமலாவோடு குரு அத்தனை சம்பாஷித்தது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

வீட்டிற்கு வந்த மறுநாள் ஜுரம் வந்தது. டைஃபாய்டு என்றார்கள். பிறகு மலேரியா என்றார்கள். பிறகு வேறு விஷ ஜுரம் என்றார்கள். ஆறு நாள் கழித்து மூளையில் பிரச்சனை இருக்கிறது, பன்றியை கடித்த கொசு இவரை கடித்தது மெலைஞ்சைடிஸ் என்ற நோய் வந்துவிட்டது என்று சொன்னார்கள். எந்த பன்றி, எந்த கொசு, எப்போது கடித்தது என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் கடும் ஜுரமும், தலைவலியும், அனத்தலும், உணவு உண்ண முடியாமல் வாந்தி எடுத்தலும் மிகப் பெரிய பிரச்சனையை கொடுத்தது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மெனஞ்சைடிஸ் என்று கண்டுபிடித்த பிறகு இதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே வழி, வேறு எதிலும் அடங்காது என்று சொல்ல நாங்கள் திகைத்துப் போனோம். அந்த நேரம் எனக்கு அவ்வளவு சம்பாத்தியம் இல்லை. ஆனால் எதனாலேயோ என்னால் காசு புரட்ட முடிந்தது. எனக்குத் தரவேண்டியவர் காசு கொடுக்க, நான் அந்தப் பணத்தை மருத்துவமனையில் கட்டி அறுவை சிகிச்சைக்குத்தாயரானேன்.

என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு தகவல் அனுப்பினேன். மிகக் கூர்மையாக அவர் கேட்டதாக எனக்குச் சொல்லப்பட்டது. நான் கொஞ்சம் பயந்து போய் என் மனைவியை அனுப்பினேன். ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய்க்கே தகறாரான ஒரு காலகட்டம். சாந்தா யோகி ராம்சுரத்குமாரிடம் போய் கமலாவின் நிலையைச் சொல்ல, சாந்தா கையில் எவ்வளவு வைத்திருக்கிறாய் என்று கேட்க, முன்னூறு ரூபாய் என்று சொல்ல, இங்கு யாரிடமாவது கடன் வாங்கி எப்படியாவது உடனடியாக இந்த சத்திரத்தை போய் பதிவு செய்து விட்டு வா. இந்த தேதியில் சூரியாவிற்கு உபநயனம் ஆகவேண்டும் என்று அந்தத் தேதியை குறிப்பிட்டு செய்து விட்டு வா என்று பகவான் சொல்ல, சாந்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு டெலிபோன் செய்தார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ஐநூறு, ஆயிரத்திற்கே அல்லாடிக் கொண்டிருக்கிறபோது என்ன கடன் வாங்கி எப்படிச் செய்வது. “It is a must, You must do it” என்று ஆணித்தரமாகச் சொல்ல, குருவை மீறாத எங்கள் குடும்பம் சரி என்று ஒத்துக் கொண்டது. செலவோடு செலவு என்றது. மிகுந்த கவலையிலும் மன உளைச்சலிலும் நாங்கள் இருந்தோம். அன்றைய தேதிக்கு வெகு நிச்சயம் கமலாவால் மருத்துவமனையை விட்டு வரமுடியாது. ஏனென்றால் பத்து, பதினோறு நாளில் அந்த விஷயத்தை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

நான் கமலாவை அவர் வீட்டு மனிதர்கள் பொறுப்பில் விட்டு விட்டு இருக்கிற காசை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு வண்டி வைத்துக் கொண்டு போனேன். ஹோமம். ஹோமத்திற்கு நடுவே நாந்தி என்கிற சடங்கு. அதாவது என்னுடைய மூத்தோர்கள், அப்பா, அப்பாவிற்கு அப்பா, அந்த அப்பாவிற்கும் அப்பா என்று என்னுடைய தலைமுறையும் என் மனைவியின் தலைமுறையும் உள்ளவர்களை பிராமணர்களை வரவழைத்து அமர்ந்திருந்த பிராமணர்களுக்கு பூவும், காசும் கொடுத்து, கால் அலம்பி விழுந்து நமஸ்காரம் செய்து நான் இப்பொழுது உபநயனம் என் மகனுக்குச் செய்யப் போகிறேன். நீங்கள் எல்லோரும் வந்திருந்து வாழ்த்த வேண்டும் என்று வடமொழியில் விண்ணப்பித்துக் கொண்டு என்னுடைய ஹோமத்தைத் தொடர்ந்தேன்.அதை அருகிருந்து குரு கவனித்தார்.

கமலா அங்கு கிழிந்த நாராய் கிடக்கிறாள் என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது ஓடிக் கொண்டுதான் இருந்தது.

“Balkumar, Don’t worry about Kamala. Kamala will walk. Kamala will run” என்று பலமுறை அவர் ஆங்கிலத்தில் சொன்னார். பலபேர் இருந்த கூட்டத்தில் மிகக் கடுமையான வேதனையோடு கூடிய ஒரு பரவசநிலைக்கு என்னை ஆழ்த்தினார். நான் என்னுடைய சுயநினைவை இழந்து வேறு ஒரு மனோநிலைக்குப் போனேன். அது பூமியோடு சம்பந்தப்படாத மனோநிலை. அது பிரபஞ்சத்தோடு சம்பந்தப்பட்ட நிலை. அந்த இடத்திற்கு போவதற்குள் வலி முதுகுதண்டை குடைந்தது. வாய்விட்டு அலற நேரிட்டது.

ஆனால் கண்முன்னே எதிரே இருப்பவருடைய உயிர்சுருளும், என்னைச் சுற்றியுள்ள பிரபஞ்ச சக்தியும், தொலைதூரத்தில் உள்ள திருவண்ணாமலையில் உள்ளுக்குள் இருந்து வருகின்ற நீல ஒளியும் என்று பல்வேறு விஷயங்கள் தெரிந்தன. உலகம் மனிதர்களாலும், ஏனைய உயிர்களாலும் ஆனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. முற்றிலும் தவறு. இந்த உலகத்தில் நம்மைச் சுற்றியுள்ள உயிர்களையும், நம்மையும் தவிர வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. அவைகளை பார்க்கிற யோக்கியதை அல்லது லட்சணம் நமக்கு இல்லை. அந்த இடத்தைத் தொட யோகிகளும், ரிஷிகளும் முயற்சி செய்து தெளிவாகியிருக்கிறார்கள்.

அந்தத் தெளிவு நான் கேட்காமலேயே எனக்குத் தரப்பட்டது.

ஒருவன் தன் மனதை நிலைநிறுத்தி தன் மனதை சுற்றியிருக்கின்ற விஷயம் என்ன என்பதை வெகு நிச்சயம் பார்க்க வேண்டும். பார்க்காதவர் குருடர் என்றே கொள்ளலாம். அப்படி ஒரு விஷயத்தை என் மனைவி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த போது, கிழிந்த நாராய் படுக்கையில் படுத்திருக்கும்போது எனக்கு இந்த உயர் நிலையை ஏற்படுத்தினார். எப்படி பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தார். அந்த ஒரு பலத்தில் நான் என் மனைவியைத் தடவ, அவளை கை கோர்த்து பிரார்த்தனை செய்ய எழுந்திரு என்று அவளுக்கு மௌனமாய் உற்சாகம் கொடுக்க, அவர் மெல்ல மெல்ல தேறினார். என் குருநாதர் சொன்னபடி கமலா எழுந்தாள். ஓடினாள். இன்றுவரை மிக சௌக்கியமாக இருக்கிறாள்.

வல்லமைபெற்ற, சத்தியம் மிகுந்த, ஆளுமை மிக்க, அன்பு கனிந்த ஒரு குருவால்தான் இதை மற்றவருக்கு சொல்லித் தர முடியும். இது சொல்லித் தருதல் கூட அல்ல. உணர்த்துதல். இப்படி உணர்த்தியதை நான் மிகப் பெரிய பாக்கியமாகக் கருதினேன். புலி புலிக்குட்டியை நக்கித்தான் புலியாக்கும். எனக்குள் ஏதோ ஒரு தகுதி இருந்திருக்கிறது. அந்த நிலையை எனக்குக் காட்டி கொடுத்தார். இன்றுவரை மற்றவருக்கு பிரார்த்தனை செய்வது என்பது கூர்த்த மதியோடும், அமைதியோடும், எந்தவித எதிர்ப்பார்ப்பு இன்றியும் செய்ய முடிகிறது.

என் குரு திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமார் சத்திய சொரூபி. அவர் பல்வேறு பக்தர்களுடைய மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கிறார். அவருடைய அற்புதமான ஆசிரமம் ஒன்று திருவண்ணாமலையில் ரமணாசிரமத்திற்கு எதிரே உள்ள பாதையில் இருக்கிறது. ஒரு முறை போய் அவரை உணர்ந்து விட்டு வாருங்கள். உங்களுக்கும் ஏதேனும் புரியக் கூடும்.