[குருவழி புத்தகத்திலிருந்து …]

ஜென்ம ஜென்மமாய் செய்த தவம் தான் அதற்கு காரணம் என்று எனக்குத் தோன்றியது. இல்லையெனில் என் பொறுமை இன்மைக்கு அந்த சந்திப்பு நிகழ்ந்தேயிராது. அப்படியே அந்த சந்திப்பு நிகழ்ந்து இருந்தாலும் வெகு சீக்கிரமே விலகி வெவ்வேறு திசையில் நகர்ந்து இருக்க வேண்டும். மாறாய் அது என்னை பற்றி இழுத்துக் கொள்ள, நான் அதற்குள் புகுந்து உட்கார்ந்து கொள்ள ஒரு மிகப்பெரிய மனமாற்றம் என்னுள் நிகழ காரணமாக இருந்தது ஜென்ம ஜென்மாந்திர தபஸ் மட்டுமே.

“குருபிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர”

என்று எனக்கு சிறு வயதிலேயே சொல்லித் தரப்பட்டுள்ளது.

குரு என்பவர் சிவனே விஷ்ணுவே அதுவே சகலமும். பரப்பிரம்மம் என்று எனக்கு போதிக்கப்பட்டு இருந்தது. இதனால் குரு என்று சொல்பவர் மீது நான் மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்துக் கொண்டிருந்தேன்.

குரு என்பவர் யார் என்று நினைக்கின்ற பட்சத்தில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் குரு என்று நினைத்திருந்தேன். இல்லை என்று வெகு சீக்கிரமே அந்த ஆசிரியரை எனக்கு அவர் அறியாமல் தெரிவித்துவிட்டார். வேறு ஒரு மாணவனின் பர்ஸில் இருந்து காசு திருடும் வாத்தியாரை பார்த்ததிலிருந்து ஐயோ பாவம் என்று தோன்றியதே தவிர அதற்குப் பிறகு எந்த ஆசிரியரையும் குருவாக நான் பார்க்கவில்லை. அலுவலகத்தில் வேலை கற்றுக்கொடுத்தவர் வேலை வாங்குபவர் இவரை குரு என்று சொல்ல நானும் அரைகுறை தலையசைத்து வைத்தேன். உற்றுப் பார்க்கையில் அது வெறும் பொறாமை பிண்டமும் சுயநல சோம்பேறியாக இருப்பதை தெரிந்து கொண்டு வெறும் மேனாமினுக்கிகளை குரு என்று அழைப்பது தவறு என்பதும் புரிந்து போயிற்று.

குரு என்பவரை துறவி என்றும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் காஷாயம் கட்டியவரே இந்தச் சொல்லுக்கு ஏற்றவர் என்ற நினைப்பே என்னிடம் இருந்தது. இடுப்பில் தான் காஷாயம் நாக்கு நாலாபக்கமும் அலைந்தது.

நம்ம சங்கரன் ஒரு கத்தரிக்காய் ரசவாங்கி பண்ணுவான். கடலைப் பருப்பு கடலைப்பருப்பாய் வறுத்து உப்பும் உறைப்பும் ரொம்ப திட்டமா போட்டு மணக்க மணக்க கொண்டு வந்து தருவான். என்று பலரை ஜொள்ளுவிட செய்யும் அந்த பேச்சு பார்த்த பிறகு மோர் சாதம் திகட்ட வேண்டிய இந்த பருவத்தில் இப்படி உணவு பற்றி பேசுகிறாரே என்ற கவலை வந்தது. பிராமணாள் போஜன பிரியாள் என்று வசனம் வேறு அவர் சொன்னபோது இந்த வாசகத்தை விட பெரிய அவமானம் வேறு எதுவும் இல்லை என்றும் தோன்றியது.

தமிழ் மட்டும் தான் மொழி மற்றதெல்லாம் சுழி என்கிற சித்தாந்த ஞானிகளையும் உற்றுப் பார்த்து இருக்கிறேன். தானும் பிளவுபட்டு மற்றவரையும் பிளவுபடுத்தி ஒரு கந்தரகோலம் ஆன மனிதர்களாகத் தான் அவர்கள் இருந்தார்கள்.

ஓர் இசை மேதை என்னை வேறு ஒரு சித்த புருஷரிடம் அழைத்துப் போனார். ஒரு பழைய பங்களாவில் மேல் மாடியில் இருந்த அந்த சித்த புருஷர் இருந்த இடம் மிகுந்த ரம்மியமாய் இருந்தது. ஆனால் அவர் பேசுவது என்ன என்று எனக்கு புரியவில்லை. நான் பேசுவது அவருக்குப் புரிந்ததா என்ற சந்தேகமும் இருந்தது. அது பரப்பிரம்மம். அது ஒரு ஸ்திதியில் இருக்கின்ற உன்னத ஜீவன் என்பது மட்டும் உள்ளுக்குள் உரைத்தது. கடல்மீது நடப்பவர் கடற்கரையில் திரிபவர். இப்போது இங்கே கொண்டுவந்து வைத்திருக்க வைத்திருக்கிறார்கள் என்று ஓர் அம்மாவை இனம் காட்டினார்கள் அவர் நிலையும் வேறு ஏதோ ஒரு உயர்ந்த இடத்தில் இருந்தது. அது பேச்சற்ற நிலை. புலியின்பார்வை. அங்கே வெகு நேரம் அமர்ந்து இருக்க என்னால் முடியவில்லை.

குருவை ஏன் தேடுகிறாய். நமக்கு குரு இவர்தான் என்று அம்மா காஞ்சிபுரம் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை சுட்டிக்காட்டினார்கள். மகா பெரியவா தான் நமக்கு எல்லாம் என்று சொன்னார். ஆனால் நான் பார்த்த நேரத்தில் அவரைச் சுற்றியிருந்த ஜனங்கள் வடமொழிப் புலமை மிக்கவர்களாகவும் அது குறித்த பேச்சுகள் மட்டும் பேசுபவர்களாகவும் இருந்தார்கள்.

நான் அந்தணன் ஆயினும் வடமொழிப் பயிற்சி சிறிதும் இல்லாதவன். என் தாயார் தமிழ் பண்டிதையாக இருந்ததால் தமிழில் ஆர்வம் இருந்தது அவ்வளவே. சதஸ் நடக்கிறது.சதஸ் நடக்கிறது என்று பல பேர் சொல்ல நான் போய் கிட்டே உட்கார்ந்து காது கொடுத்து கேட்டபோது ஒரு வார்த்தையும் புரியவில்லை. ஒரு செய்தியும் விளங்கவில்லை. நான் மிகுந்த அந்நியமாக என்னை உணர்ந்தேன்.

மகா பெரியவாள் என்ற அந்தக் கருணாமூர்த்தி என்னை மிகச்சரியாக பாதை மாற்றி விட்டார்.

உன் புத்திக்கேற்றபடி உன் சக்திக்கு ஏற்றபடி உன் சூழ்நிலைக்கு ஏற்றபடி என்று என்னை திசை திருப்பினார். அவர்கள் எல்லாம் வாயால் பேசாதவர்கள். செய்கையை கூட விளம்பரப்படுத்தாது அவர்கள் சூட்சுமமான செய்கையால் நம்மை வழி நடத்துபவர்கள்.

எனக்கென்று ஒரு சாத்துக்குடிப் பழம் உருட்டி விட்ட போது, நான் ஆவலோடு உருண்டு வந்தபழத்திற்கு காத்திருக்க, என்னை முந்திக் கொண்டு என்னை விட 10 வயது மூத்தவரான ஒரு மனிதர் முன்னே போய் அந்தப் பழத்தை லாவி கொண்டு, “மகா பாக்கியம் மகா பாக்கியம்”  என்றும் “எனக்கு கொடுத்தா எனக்கு கொடுத்தா” என்றும் உரக்கச் சொல்லிய போது நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதிர்ச்சி அடைந்து நின்றேன்.

ஏதோ ஒரு குரல் “நீங்க குறுக்கே போய் எடுத்துட்டீங்க” என்று சொல்ல முற்பட அதை அவர் வேறு விதமான சப்தங்கள் மூலம் அடக்கினார்.

“பகவானே என் மேல இந்த அளவு கருணையா” அதிகப்படியான வசனங்கள் பேசினார். அது என்னை நோக்கி வரவில்லை போலும் என்று நான் அமைதியானேன்.

மூன்று நிமிடங்கள் வெறுமே அதே விதமான பிரார்த்தனையோடு எனக்கு குரு வேண்டும் என்கிற ஏக்கத்தோடு மகா பெரியவரைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்த முறை தீர்க்கமாய் ஒற்றை விரல் நீட்டி என்னை அருகே அழைக்க வேறு எவரும் போகவில்லை. போக முடியவில்லை. நான் மட்டும் நான்கடி முன்னே போனேன்.

அங்கிருந்த பழத்தில் மிகப்பெரிய பங்கனப்பள்ளி பழத்தை எடுத்து அவர் கை நீண்டது. என் முதுகு குனிந்து இரண்டு கைகளும் நீட்ட குவிந்து விரிந்த என்னுடைய கைகளில் அவர் பழம் போட்டார்.

குரு என்கிற ஏக்கம் எனக்கு தீரும் என்பது புரிந்துவிட்டது.

இனம்புரியாத ஒரு நிறைவு என் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது என்கிற ஒரு தெளிவு. அந்த மாம்பழத்தோடு வெளியே வந்தேன். வெளியே அந்த சாத்துக்குடி பழம் அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது. “கருணை அம்மா அது கருணை” என்று புலம்பிக் கொண்டிருந்தது. அந்த வீட்டுப் பெண்களும் கண்களை கசக்கிக் கொண்டு இருந்தார்கள்.

அங்கே சுற்றி இருப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் ஒரு நாடகத் தன்மை இருப்பதாய் நான் உணர்ந்தேன். இந்த நாடகம் உனக்குள் வரக்கூடாது. கவனம் ஆடாதே, பொய்யாய் இருக்காதே உண்மையாயிரு. அவனுடைய பொய்மை உனக்கு காட்டப்படுகிறது, நீ உண்மையாக இருக்கவே அந்த பொய்யை உற்றுப்பார் என்று எனக்குள் தோன்றியது.

சில நொடிகளே பார்த்த அந்த முகத்தை அந்த பொய்மையை அந்த நாடகத்தை அந்த வெறும் வசனத்தை நான் மறுபடி மறுபடி யோசித்து மௌனமாக இருக்க கற்றுக் கொண்டேன்.

மூன்று மாதம் பொருத்து திருவண்ணாமலை சன்னதி தெருவில் கம்பிகளுக்கு ஊடே சிங்கம் போல் அமர்ந்திருந்த யோகிராம்சுரத்குமார் அவர்களைப் பார்க்கும்போது என் குரு இவர்தான் என்று சர்வ சத்தியமாய் எனக்கு தெரிந்து போயிற்று. குரு இங்கே இருக்க நான் எங்கேயோ தேடி இருக்கிறேனே என்று நினைத்தேன்.

அவர் அருகே போக முயற்சித்தபோது “Not now. Later” என்று கட்டளை போலும் அவர் சொன்னார்.

நான் உடனடியாக அந்த இடம் விட்டு அகன்றேன். புறக்கணிப்பு என்பது முன்பெல்லாம் எனக்கு அவமானமாக தோன்றும். துடித்துப் போவேன். ஆனால் அப்படியெல்லாம் துடிக்கவில்லை. துடித்துப் போவதான பொய்மை எனக்குள் வரவில்லை.

காரணமில்லாமல் அவர் சொல்ல மாட்டார். நமது சந்திப்பு இப்போது இல்லை பிற்பாடு என்று சொன்னால் அதைச் சொல்பவர் உங்கள் குரு என்றால் உடனடியாக அதன்படி கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது தவிர வேறு எந்த கேள்வியும் அங்கு இல்லை என்பது புரிந்து போயிற்று, கீழ்ப்படிந்து நடத்தல் எல்லாம் என்னிடம் இல்லாத குணம்.

என்ன Later இப்பவே பார்த்தாலென்ன என்றுதான் எனக்கும் சிந்தனையோடும். அங்கே சப்தமே எழவில்லை. காரணம் அந்த சன்னதியின் மகத்துவம். அந்த உருவத்தின் கம்பீரம். இப்போது இல்லை பிறகு என்று நான் துரத்தப்பட்ட போது அடங்கி நகர்ந்தேன். பிறகு அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நான் துள்ளிக் குதித்தேன். கண்டறியாதன கண்டேன் என்று உள்ளுக்குள்ளே மனம் பாடியது. தேடிக் கண்டுகொண்டேன் என்று பிதற்றியது.

Later என்பதற்கு என்ன அர்த்தம்? என்ன தேதி? எந்த மாதம்? எந்த கிழமை? எனக்கு தெரியவில்லை. ஆனால் மூன்று மாதம் கழித்து போய் நிற்க அப்போதும் வரவேற்பு சரியாக இல்லை. என்னை அழைத்துப் போனவரை உள்ளே உட்கார வைத்துவிட்டு என்னை வெளியே நிற்கவைத்துவிட்டது.

இது ஏதோ விளையாடுகிறது என்னை சோதிக்கிறது. எடைபோட்டு பார்க்கிறது. உரசி இது உயர்ந்த சரக்கா? என்கிற ஆராய்ச்சி நடத்துகிறது என்பதை புரிந்து கொண்டேன். மூன்றாம் முறை போக மிக நெருக்கமான தரிசனம், பிரியமான வார்த்தைகள், வேகமான தொடல்கள். நிறைய விசாரிப்புகள். என் கைகளை கோர்த்து கொண்டு உற்று என் கண்களை பார்த்து, என் மீது சாய்ந்து, என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தினார். பிறகு தலையை தடவினார். கழுத்து தடவினார். முதுகை தடவினார். என்னுள் இருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தியை மிகப்பெரிய சந்தோசத்தை விவரிக்கமுடியாத அதிர்வை நான் உணர்ந்தேன். இந்த உலகம் நீ நினைக்கும் வண்ணமாய் இல்லை. அது உண்மையில் வேறு ஒரு ரூபம் உடையது. அந்த ரூபத்தில் ஒரு பகுதி இதோ உனக்கு காட்டப்படுகிறது என்று அவர் சொல்லாமல் சொன்னார். இது தொடங்கி பல முறைகள் அவருக்கு அருகே ஆனந்த பரவசம் அனுபவித்தேன். அவரின் ஒவ்வொரு அசைவும் புரிந்தது. ஒவ்வொரு பேச்சும் புரிந்தது. அவரின் ஒவ்வொரு செய்கையையும் மிக ஆழமானது என்பதை என்னால் உணர முடிந்தது.