” இன்னொரு பிறவி எடு.உன் ஆசை எதுவோ அதைத் தீர்த்துக் கொள். ஆசை தீர வைகுண்டம் தானே வரும். ஆசை விடு… விட்ட இடம் வைகுண்டம். ”

” புரிகிறது. ”

” இந்தா… ” தீர்த்தப் பாத்திரத்திலிருந்து நீர் எடுத்து அவள் மீது தெளித்தார். உள்ளங்கை குவித்துக் கிழவி நீட்ட நீர் ஊற்றினார். அவளையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கிழவி துவண்டாள். சரிந்தாள். விழுந்தாள்.

” கணிகண்ணா… ”

” ஸ்வாமி… ”

” இவளை எடுத்து எதிரில் உள்ள அறையில் பூட்டு. ”

எதற்கு…? கேள்வி எழுந்தது. பதில் கிடைக்காது என்று தெரியும். வாரி கிழவியை எடுத்துக் கொண்டு இருட்டான கோயில் அறையில் வைத்துப் பூட்டினான். எதிரே உட்கார்ந்து கொண்டான்.

அது மறுபடி யோகத்தில் அமிழ்ந்து விட்டது.

‘ இருந்த ஒரு உதவியும் போய்விட்டது. இனி நானே மலர் மாலை கட்ட வேண்டும். ‘ விழுந்து வணங்கினான். அருகே ஒரமாய்ப் படுத்துக் கொண்டான். இருட்டியது. உறங்கிப் போனான். விடிந்து முதல் குயில் கூவும் வேளை கதவு உலுக்குவது கேட்டது. திடுக்கிட்டு எழுந்து ஒசை கேட்டான்.

கிழவியை அடைத்த கதவு. அடடே என்று பதறி ஓடினான். தாள் திறந்தான். நிலவு ஒளியில் ஒரு பெண். பதினாறு வயதுப் பெண் வந்தாள். சிரித்தாள்.

” யாரம்மா நீ…? ”

” வண்ணமாலை ”

குரல் மாறியிருந்தது. உடல் மாறியிருந்தது. யௌவனம்… பேரழகு யௌவனம்! இதுதான் மரணமா? இதுதான் பிறவியா? ” உன் ஆசை தீர்த்துக் கொள்.” என்ன ஆசை வண்ணமாலைக்கு?

” கண்ணா…” அவள் கை கூப்பினாள். துள்ளி அது இருக்குமிடம் ஓடினாள். நீண்ட கருங்கூந்தல் இழுத்துக் கட்டின தசை. திமிரும் இளமை. பொலிவு கொண்ட மாசு அற்ற முகம். பெரிய பெரிய கண்களில் கருணை.

பெருமாளே… இதென்ன அதிசயம்! இந்தக் கிழவிக்கு கிடைத்த மிகப்பெரிய பேறு. இது வாய் திறந்து கேட்கவேயில்லை. அதுவே வழங்கியது. கூப்பிட்டுக் கொடுத்தது. எனக்கு? எனக்கு என்ன தரப்போகிறாய்… என்ன வேண்டும் எனக்கு? இளமையா, செல்வமா… நீண்ட ஆயுசா… வேண்டாம். என்றும் உன்னோடிருக்க வேணும். சூரிய சந்திரர் உள்ள மட்டும் உன்னோடு நானும் இருக்க வேண்டும். அது போதும்.

வண்ணமாலை விழுந்து விழுந்து நமஸ்கரித்தாள். ஐம்பது, அறுபது, எழுபது… ” போதும் ” அது குரல் கொடுத்து மெள்ளச் சிரித்தது.

” எனக்கு என்ன உத்தரவு? ”

” உன் ஆசையைத் தீர்த்துக் கொள். ”

” சரி.”

கோயில் பெருங்கதவு திறந்த பட்டர் அதிசயித்தார். ‘ வண்ணமாலையா… வண்ணமாலையா இது. அதே ஜாடை, அதே பாவம்… ஆனால் பொங்கும் இளமை. ‘ ஊர் முழுக்க செய்தி பரவியது.

இப்படி ஒரு அழகா!

பல்லவ மன்னனுக்குச் செய்தி போயிற்று.

” பேரழகியா.. தேவதாசியா.. உருமாறினாளா…அழைத்து வா.”

மன்னன் கிறுகிறுத்து போனான்.

ஊரில் உயர்ந்த பொருள் மன்னனுக்குத்தானே.

” என்னோடிரு வண்ணமாலை… ” மன்னன் கெஞ்சினான்.

” சித்தம். ஆனால்…? ”

” என்ன வேண்டும்? சொல்! பொன், பொருள், மாடுகள், குதிரை… சகலமும் தரப்படும். ”

அத்தனையையும் வண்ணமாலை கோயிலில் இறக்கினாள். கிழவியை குமரியாக்கிய அதிசயம் ஊர் ஊராய்ப் பரவிற்று. திருமழிசைபிரான் அறக்கட்டளையாக ஆயிரம் ஆயிரம் பேருக்கு உணவு. அவர் பாடல்களை பிரதி ஒலை எடுக்க படித்தவர் கூட்டம். எடுத்தவருக்குச் சம்பாவனை. பாடியவருக்குப் பரிசு. எது வண்ணமாலை செய்தாலும் அவரின் பெயரால் திருமழிசைபிரான் அறக்கட்டளையால் நடந்தது.

அரண்மனையை விட கோயிலில் கூட்டம். அரசனை விடவும் பிரானுக்கு மதிப்பு. எவர் வாயிலும் அவரைப் பற்றி பேச்சு… புகழ்! உட்கார்ந்த வண்ணமே அது ஊரை வளைத்து விட்டது.

தன்னைவிட உயர்ந்தவர் ஊரிலிருக்க மன்னனுக்கு ஆகுமா?

” அவரை வரச் சொல் வண்ணமாலை. ”

” வரமாட்டார். நீங்கள் போக வேணும். ”

” அவர் பாட்டு கேட்க வேணும். ”

” கணிகண்ணனை வரச் சொல்கிறேன். ”

” யார் அது…? ”

” அவருடைய சீடன். அவர் பாடல் பாடும் திறன் உடையவன்”

சபைக்கு கணிகண்ணனை வரச் செய்தார்கள்.

” பாடு.”

” எது பாட வேண்டும்? ”

” என்னைப் பற்றி. ”

” உன்னைப் பற்றி பாட என்ன இருக்கிறது? ”

” நான் மன்னன்.”

” மன்னனுக்கு பிறந்த மன்னன். உனக்குப் பதிலாய் மரக்கட்டை பிறந்திருப்பினும் அதுவே மன்னன். எனவே உன்னை எதுவும் பாட இயலாது. ”

மன்னன் புருவம் சுருக்கினான்.

” எதுப்பற்றி பாடுவாய்? ” சீறினான்.

“காஞ்சிபுரம் பற்றி பாடுவேன். ” கணிகண்ணன் பாடினான்.

மன்னனுக்கு எரிந்தது. ” நானில்லாது என் நகரம் உண்டோ. இந்த நகரச் சிறப்புக்கு நான் காரணமா _ இல்லை, உன் பள்ளிக்கொண்ட பெருமாளா? ”

” நீ காரணமில்லை என்பது தெரியும். ”

” அப்படியா? அப்போது என் நகரத்தில் உனக்கென்ன வேலை? என் இடம் விட்டு போ. வெளியேறு. ”

நாடு கடத்தல்.. நல்லது. மக்களுக்கு புரிந்தது. மன்னனுக்கு புரியவில்லை. அதிகாரம் உள்ளவனுக்கு எதுவும் புரியாது. தானே எல்லாம் என்கிறவனுக்குப் பிறர் உன்னதம் புரியாது. தன்னைத் தவிர வேறு எவரும் சிறப்படையக் கூடாது என்கிற நிலைக்கு வந்தவனிடம் தன்மையான பேச்சு எடுபடாது. தனக்கும் மரணம் நேரும், தானும் மண்ணாக நேரிடும் என்பது தெரியாது. தான் சாஸ்வதம் என்கிற நினைப்பே கர்வம்… அகந்தை. அகந்தையின் விளைவு ஆக்ரோஷம், ஆத்திரம். ஆத்திரம் செயலில் வெளிப்பட, நாசம். இது நீ நசிந்து போகும் காலம்.

கணிகண்ணன் திருமழிசைபிரானிடம் வந்தான். மன்னன் உத்தரவு சொன்னான்.

” உத்தரவிடும் போது வண்ணமாலை அருகே இருந்தாளா? ”

” இருந்தாள்.”

“என்ன சொன்னாள்? ”

” சிரித்தாள்.”

” பிறகு?”

” எல்லாம் நல்லதற்கே ” என்றாள்.

” நல்லது… புறப்படுவோம். ”

” தேவரீர்! எங்கே புறப்படவேண்டும்? தண்டனை எனக்குத் தானே?”

” நான் வரமாட்டேன் என்பதால்தானே உனக்குத் தண்டனை. என் நிமித்தம்தானே நீ நாடு கடத்தப்படுகிறாய். நீ இல்லாத இடத்தில் எனக்கென்ன வேலை? ”

” ஸ்வாமி… உமது கால் நோகும்…? அவன் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து, பிடித்து நிறுத்தினான்.

” ராமன் நடக்கவில்லையா… வனம் நோக்கி பல வருடங்கள் நடந்து நடந்து போகவில்லையா… அவனுக்குக் கால் நோகவில்லையா. நமக்கு நொந்தால் என்ன? ”

நடந்த கால்கள் நொந்தவோ. நடந்த ஞானமேனவாய் பாடினார்.

தீர்த்தப் பாத்திரமும் சில உபகரணங்களும் எடுத்துக் கொண்டான். அவன் தோள்பிடித்து மண்டபம் விட்டு இறங்கினார். தொட்ட இடம் சுட்டது. உள்ளே கோபம் இருப்பது தொடலில் தெரிந்தது.

-தொடரும்