அது சம்மணமிட்டு ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்திருந்தது. நீண்ட வெண்தாடியும் பொன்னிற உடம்பில் போர்த்திய சால்வையும் அங்கங்களில் அளவாய்ச் சாத்திய திருச்சின்னங்களுமாய்க் கண்மூடி மெல்லிய நிரந்தரச் சிரிப்போடு தன் நினைவற்றுப் பரமானந்தம் லயித்திருந்தது.

கணிகண்ணன் இன்னும் அருகே போய் உட்கார்ந்து அதைத் தரிசிக்க விரும்பினான். வெளியே புரட்டாசி உச்சிவெயில், கோயில் தளத்தை தாக்கி வெப்பக்காற்றை மண்பத்துக்குள் தள்ளிக் கொண்டிருந்தது. வெட்டிவேர் விசிறியை ஈரம் செய்து உதறி, அருகே போய் அமர்ந்து விசிறத் துவங்கினான். வெட்டிவேரின் மணமும், ஈரமும் அதன்மீது மிருதுவாய்ப் படும்படி விசிறினான்.

அது அவ்வப்போது இப்படி அமர்ந்துவிடுகிறது. விடியற்காலையில் அதன் எதிரே ஒருமுறை கை தட்டுவான். கண்மடல்கள் மெள்ள திறக்கும். எதிரே இருப்பதை இல்லாததாய் பார்வை நிற்கும்.

” தேவரீர், ஒருவாய்ப் பசும்பால் எடுத்துக் கொள்ள வேணும்… ” பணிவாய், ரகசியமாய் கேட்பான். ‘ நீ கேட்டதற்காக வாய் திறக்கிறேன் ‘ என்பதாய் மெள்ள அதன் வாய் பிரியும். நாலு மடக்கு குடித்துவிட்டு மூடிக்கொள்ளும். பால் குடித்த சுகமோ, சுவையையோ மனம் காட்டாது. மறுபடி யோகத்தில் லயித்துவிடும். உதடுகளில் வழிந்த பாலைத் துடைத்து அப்படியே ஈரத்துணியால் முகம், உடம்பு ஒற்றி எடுத்து மறுபடி திருமண் இட்டுக் கழுத்தில் ஒரு மலர்மாலை சாத்திவிடுவான்.

மனசு தூய்மைதான் யோகம். மனசு சுத்தம் தான் உடல் சுத்தம். உணர்வுகள் முழுவதையும் ஆமை தன் உறுப்புக்களை உள்ளிழுத்து கொள்வது போல், ஆழ்கடலில் அசையாது அமிழ்ந்து கிடத்தலைப் போல் அது கிடக்கிறது.

பள்ளிகொண்ட பெருமாளை, பழைய திருமழிசைபிரானார் பாடலாய் இருந்தாலும் இதைப் பாடுகிறபோது திருமழிசைபிரான்தான் தோன்றுகிறார். அது தன்னைக் குறித்து பாடாது. பாடத் தெரியாது. உள்ளே கடவுளின் திவ்யதரிசனம் கண்டுவிட்ட பரவசத்தில் எழுந்த பாடல் இது. பாடிய பிரானுக்கும் பாட்டு பொருந்துகிறது. கடவுளும், கடவுளை கண்டவரும் ஒன்றே. ‘ கண்டதை கண்டு கண்டதை அழி ‘ என்பது இது.

பள்ளிக்கொண்ட பெருமானுக்குப் பணிவிடை செய்வதும், திருமழிசைபிரானுக்குப் பணிவிடை செய்வதும் ஒன்றே. பிஷைக்குப் போனால் அரிசியோ, பருப்போ, காய்கறியோ, கனிகளோ தருவார்கள். கொண்டு வந்து சுத்தம் செய்து, தான் உண்டு தருவான்.

கிழவிக்கு வீடு இல்லை கோயிலே வீடு. இறைவனுக்கே அர்ப்பணம் செய்த குலம். ஒரு காலத்தில் ஆட்டமும், பாட்டமுமாய் இருந்தவள். தள்ளாமையால் சுருண்டு கிடக்கிறாள். மாலை தொடுத்து கணிகண்ணனிடம் கொடுத்துத் திருமழிசைபிரானுக்குப் போடச் சொல்வாள்.

“வயசுக் காலத்தில் சேர்த்து வைக்கக் கூடாதா… இப்படி தாங்குவார் இல்லாது கிடக்கிறாயே…?” யாரோ கேட்டதற்கு வாய்விட்டுச் சிரித்தாள்.

இந்தக் கோயில் மண்டபம் செப்பனிட அவள் காசு கொடுத்ததும், பள்ளிக்கொண்ட பெருமாளுக்குத் தீர்த்தப் பாத்திரங்கள் பொன்னால் செய்ய நகைகள் வழங்கியதும் மக்களுக்கு மறந்தே போய்விட்டன.

இதை எடுத்து விளக்கினால் ‘உன்னை யார் கொடுக்கச் சொன்னது?’ என்பார்கள். கிழவிக்கு கொடுத்துக் கொடுத்து பழக்கம். நல்ல பசும்பால் வேண்டுமென்று கடைசி நகையும் விற்று பசு வாங்கினாள். இடையர்களிடம் பசுவை விட்டு தினமும் அரைசேர் பால் வாங்கி வருகிறாள். அது குடித்த பிறகு எஞ்சியது குடிக்கிறாள். அது யோகத்தில் இருந்து கண் விழித்ததும் தூண் பின்னே நகர்ந்து கொள்வாள். நாலு தூண்கள் தள்ளி அமர்ந்து, அது பேசுவதைக் கேட்பாள்.

திருமழிசைபிரானுக்கு தெரியும். அதற்குத் தெரியாதது உண்டா…! திடீரென்று கழுத்து மாலையைக் கழட்டி நாலு தூண் தள்ளி அமர்ந்திருக்கிற கிழவியிடம் வீசும்.

“அருகே வந்து நமஸ்காரம் செய்யேன் கிழவி.”

“செய்துவிட்டேனே… நெற்றி தேயத்தேய, இனி முடியாது… போதும் என்றளவு அங்கிருந்தே செய்துவிட்டேனே.”

“அடடே… அதுதானா… திடீரென்று அது ‘போதும் போதும்’ என்று என்னைப் பார்த்துப் பேசியது. என்னடா இது சும்மா உட்கார்ந்திருக்கிற என்னைப் பார்த்து இப்படிச் சொல்கிறதே என்று திகைத்தேன். பெருமாளே, அதற்கு முதுகிலே கண்.”

“இல்லை. உடம்பெல்லாம் கண். உலகெல்லாம் தழுவிய பார்வை. ஏழு லோகங்களையும் கடந்த திருஷ்டி. சிவனார் நெற்றிக்கண் திறக்க, பதிலுக்கு கால் கட்டைவிரல் கண்காட்டி ஊழித்தீ எழுப்பிய புருஷோத்தமன் நம் திருமழிசைபிரான்.”

“ஆமாம். இப்படி நடந்தது கேள்விப்பட்டிருக்கிறேன்… ” கிழவியும் கணிகண்ணனும் பேசுவார்கள்.

-தொடரும்