[ஆன்மீகச் சிந்தனைகள் புத்தகத்திலிருந்து …]

பல ஜென்மங்கள் எடுத்தபிறகு கௌதமர் என்ற அரசர் குமாரனாக பிறந்து புத்தம் என்ற நிலையை அடைந்தார். அதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து தன்னை உயர்த்திக் கொண்டார்.

இந்த முறை போதிசத்துவர் ஒரு காலநிதி கணக்கனாக ஒரு ஊரில் பிறந்தார். பார்த்த உடனேயே பிரசன்னம் சொல்லுவது போல பல நேரத்து கோள்களை நினைவில் வைத்து கணக்கிட்டு எந்த பொருளை பார்க்கிறோமோ அந்த பொருளுக்கு என்ன விதி என்பதை கால நிதி கணக்கர்கள் சொல்லிவிடுவார்கள். மிக துல்லியமாக இந்த கணக்கை அறிந்த போதிசத்துவர், வழியில் நடந்தபோது ஒரு செத்த எலியை பார்த்தார். அந்த எலி அவரை கணக்கு சொல்லும்படி தூண்டியது. அவர் கூர்ந்து பார்த்து இந்த எலியின் மீது பெரும் பொருள் அடங்கி இருக்கிறது மிக செல்வந்தனே இந்த எலியை தொடுவான் என்று நினைத்தார். கிரகங்களை கணக்கிட்டு பார்த்தபோது இது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

அந்த வழியில் போகும் வாலிபனுக்கு அந்த எலியை சுட்டிக்காட்டி இந்த விஷயத்தை தெரிவித்தார். அந்த இளைஞன் ஆச்சரியம் அடைந்தான். அவரை உற்றுப் பார்த்தான். கேலி செய்கிறாரோ என்று முதலில் நினைத்தான். போதிசத்துவர் தெளிவை கண்டு அவரை முழுமனதாக நம்பினான். போய் அந்த எலியை ஒரு இலையில் வைத்து பொட்டலம் கட்டி கொண்டு பூனை வளர்க்கிறவரிடம் போனான். அவரிடம் பல பூனைகள் இருந்தன. அவைகளை செல்லமாய் அவர் வளர்த்து வந்தார்.அதில் ஒரு பூனை பால் குடிக்க மறுத்து சோர்வாக இருந்தது.அவரிடம் அந்த எலியை காட்ட, அவர் ஒரு செப்பு காசுக்கு அந்த எலியை வாங்கி பூனைக்கு போட்டார்.அந்த பூனை ஆவலாக அந்த எலியை தின்றது.

அந்த ஒரு செப்பு காசுக்கு அந்த இளைஞன் ஒரு பானை வாங்கினான். அதில் முழுவதும் நல்ல நீர் நிரப்பிக் கொண்டான். ஒரு கொட்டாங்குச்சியில் நீர் மொண்டு சுற்றிலும் தெளிந்து அந்த இடத்தை குளுமை ஆக்கினான். காட்டிலிருந்து மலர்கள் பறித்து வந்த வேடுவர்கள் நீரை பார்த்ததும் ஆவலாக உட்கார்ந்தார்கள். எல்லோருக்கும் நீர் வழங்கினான். அவர்கள் ஒரு பை நிறைய விதவிதமான காட்டு மலர்களைக் கொடுத்தார்கள். அந்தக் காட்டு மலர்கள் வாங்கிக் கொண்ட அந்த இளைஞன் கோவில் வாசலில் அமர்ந்தான். மலர்களின் அழகு கண்டு மனம் கண்டு தெய்வத்தை போற்றுவதற்கு சௌகரியம் ஆகும் என்ற நினைப்போடு பல பக்தர்கள் பூக்களை வாங்கிக் கொண்டார்கள். குடி தண்ணீருக்கு வாங்கிய பூக்களை ஐந்து காசுகளுக்கு விற்றான். ஐந்து காசுகளை எடுத்து வந்து மூன்று பானைகள் வாங்கினான். இரண்டு காசிற்கு சுவையான அப்பம் வாங்கினான். அதே காட்டுவழியில் உட்கார்ந்து கொண்டான். அவர்கள் விறகுமூட்டை கொடுத்து தண்ணீரும், அப்பமும் வாங்கிக்கொண்டார்கள். மிக சுவையாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்.

அந்த விறகு மூட்டையை எடுத்து கொண்டு ஒரு தனவணிகரிடம் போய் வெந்நீர் விட்டு முதுகு தேய்த்து விடுவதாக சொன்னான். அவர் வீட்டு பாத்திரத்திலேயே விறகு போட்டு எரித்து வெந்நீர் விளாவி அவருடைய தகப்பனார், தமையனார், குழந்தைகள், அந்த எஜமானர் எல்லோருக்கும் பீர்க்கம் கருணையால் முதுகு தேய்த்து குளிப்பாட்டி எண்ணை தடவி முதுகிலிருந்து அழுக்கு எடுத்து கால்விரல் நகங்களை சுத்தம் செய்தான். அவர்கள் 15 காசு கொடுத்தார்கள்.

பலமாய் காற்றும், மழையும் அடித்தது.அரசனுடைய தோட்டத்தில் கிளைகள் முறிந்து விழுந்தன. எங்கும் குப்பை ஆயிற்று. தோட்டக்காரன் தோட்டத்தை எப்படி சரிசெய்வது தவித்தான்.

இந்த இளைஞன் போய் தான் சரி செய்து தருவதாகவும், விழுந்த மரங்களை தான் எடுத்து போவதாகவும் சொல்ல, தோட்டக்காரன் கையெடுத்துக் கும்பிட்டான். பத்து காசு வைத்துக்கொண்டு மீதி ஐந்து காசில் அந்த ஊர் சிறுவர்களைக் கூப்பிட்டு தோட்டத்தை சீர் செய்து கொடுத்தால் ஒரு காசு என்று பேரம் பேசினான். அந்த சிறுவர்கள் ஒத்துக்கொண்டார்கள். அவனும் சேர்ந்து கொண்டு தோட்டத்தினுடைய முறிந்த கிளைகளையொல்லாம் எடுத்து ஓரம் கொண்டுபோய் போட்டு இலைகளை சுத்தம் செய்து தோட்டத்தை பழைய விதமாக மாற்றினார்கள். தோட்டக்காரன் சந்தோஷமடைந்தான்.

பெரும் கிளைகளை துண்டாக்கி கட்டுக்கட்டாக உலர்த்தி, அவைகள் நன்கு காய்ந்த பிறகு ஊரில் கொண்டு போய் விற்றான். அதுவரை அவனுடைய பத்து காசு அவன் வாழ்க்கைக்கு சௌகரியமாக இருந்தது. அந்த கட்டுகள் நல்ல விலைக்குப் போயின. லேசாக ஈரம் இருக்கிறது. உலர்த்திக் கொள்ளுங்கள். மழை நாளில் சமைக்க உதவும் என்று கூவி விற்க, அவற்றை எழுபது காசுக்கு விற்றான். அந்த எழுபது காசை வைத்துக்கொண்டு பித்தளை பாத்திரங்கள் வாங்கினான். பித்தளை பாத்திரங்களை நிறைய விலைக்கு விற்று ஐநூறு காசுகள் சம்பாதித்து பசுக்களும், குதிரைகளும் வாங்கினான். பசுக்களின் பால் கறந்து வெண்ணையாக்கி, நெய் காய்ச்சி அரசருக்கு விற்றான். மணமிக்க அந்த நெய்யை அரசர் காத்திருந்து கேட்டு வாங்கிப் போனார். நெய் விற்ற காசு நிறைய லாபம் இருந்தது. அவன் சொன்னதே விலையாக இருந்தது. அந்த நெய் விற்ற காசில் வீடு வாங்கினான். குதிரை வாங்கினான். குதிரைகளை நன்கு பராமரித்தான்.

அரசன் தேசாந்திரம் போக கிளம்பியபோது பத்துகாசுக்கு வாங்கிய அந்த குதிரை நூறுகாசுக்கு விலை போயிற்று. பொதி சுமக்கின்ற குதிரைகளும், கழுதைகளும் அரசன் நல்ல விலை கொடுத்து வாங்க அவன் பெரிய மாளிகை வாங்கினான்.

அந்த இளைஞன் அந்த நிதி கணக்கரை மறக்கவே இல்ல. போதி சத்துவரை தேடிக் கொண்டு வந்தான்.

“நீங்கள் சொன்ன அந்த செத்த எலி தான் என்னை பணக்காரன் ஆக்கியது. என் வீட்டு வாசலில் ஒரு எலியின் உடைய சிற்பத்தை வைத்திருக்கிறேன். அந்த செத்த எலி எனக்கு எப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. அந்த எலியை நினைத்துக் கொள்கிறபோது அந்த எலியை சுட்டிக்காட்டிய உங்களை நான் நினைத்துக் கொள்கிறேன்” என்று வலம் வந்து நமஸ்கரித்தான்.

‘என்ன உதவி வேண்டும்’ என்று கேட்டான்.

மிகச்சிறந்த நிலையிலுள்ள இந்த இளைஞனை வேறு எவரும் ஏமாற்றி விடலாகாது என்று அவர் யோசித்து தன்னுடைய பெண்ணையே மணந்து கொள்ளும்படி அவனை கேட்டார். அவன் மிக விருப்பத்துடன், நன்றியுடன் அவர் மகளை மணந்து கொண்டான். அவளை கண்ணென காத்தான்.

தன்மகள் வசதியுள்ள, அமைதியான, அடக்கமான ஒரு மனிதருக்கு வாழ்க்கைப்பட்டு இருப்பது கண்டு அவர் சந்தோஷம் அடைந்தார். நிம்மதியானார். தன்னுடைய கணிதம் தனக்கு மிகுந்த அமைதியையும், சந்தோசத்தையும் கொடுத்ததாகச் சொல்லி, அந்தக் கால நிதி கணக்கை தனக்கு தெரிந்தவருக்கெல்லாம் சொல்லிக்கொடுத்தார். அந்த இளைஞனும் அதில் மிகச் சிறந்து விளங்கினான்.

நல்ல அறிவாளி, நல்ல குணமுடையவன் ஒரு விஷயம் செய்தால் அது பல பேருக்கு உதவும். பல குடும்பங்களை மேல் உயர்த்தும். கால நிதி கணக்கு என்பது வெறும் சாதாரண விஷயம் அல்ல. அது மிகச்சிறந்த விஞ்ஞானம். கோள்களின் அசைவை புரிந்துகொண்டு ஒரு கணக்கு ஏற்படுத்தி அந்த கணக்கின் மூலம் எதிர்காலம் உரைப்பது என்பது கடவுள் அருள் இருந்தால் தான் வரும். நேர்மை உள்ளவர்களுக்கு தான் சொல் பலிதமாகும்.

போதி சத்துவர் சொல்வளம் மிகுந்த ஒரு கால நிதி கணக்கராக வாழ்ந்து, தன்னுடைய மகளை நல்ல இளைஞனுக்கு மணம்புரிந்து வைத்து நிம்மதியாக மரணமடைந்தார்.

வாழ்க்கையில் எல்லா கடமைகளையும் முடித்துவிட்டு அமைதியாக உயிர் துறப்பது என்பது வெகு சிலருக்கே நடக்கிறது. இவ்வாறு பல பிறவிகள் எடுத்த போதிசத்துவர் அந்தப் பிறவிகளில் காரணமாகவே கௌதம புத்தர் என்பவர் ஆக பிறந்தார்.

அந்த கௌதம புத்தரின் தேடலே, ஞானவாழ்க்கையே அவரை புத்தம் என்ற இடத்திற்கு அழைத்து போயிற்று. புத்தம் என்ற ஞானம் கொடுத்தது. அந்த ஞானம் வருவதற்கும் இந்த பல பிறவிகளில் அவர் செய்த பல நல்ல காரியங்களை காரணம். ஒரு நாள் நீங்களும் புத்தராக வேண்டாமா. இன்றே துவங்குங்கள். உடனே துவங்குங்கள். இப்பொழுதே, இங்கேயே நல்லது செய்ய ஆரம்பித்து விடுங்கள். ஒரு நாள் நீங்களும் புத்தராகலாம்.